முதியோர்களுக்காக கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்த முதியோர்களுக்கான எழுத்தறிவு குறித்த மதிப்பீட்டு முகாம் நேற்று தொடங்கியது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் எழுதப்படிக்கத் தெரியாதோருக்கு கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து எழுத்தறிவு, வாசிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் சுமார் 3.10 லட்சம் பேருக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் முதியோர்களாகவே உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 394 மையங்களில் முதல் கட்டமாக 7,949 பேர் பயிற்சி பெற்று வந்தனர். இவர்களுக்குத் தன்னார்வலர்கள் சார்பில் தினந்தோறும் 2 மணி நேரம் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், பயிற்சியின் நிறைவாக அனைத்து மையங்களிலும் மதிப்பீட்டு முகாம் நேற்று நடைபெற்றது. முதியோர்களிடம் எழுத்தறிவு, வாசிப்பு திறன் குறித்து சோதிக்கப்பட்டது. மையங்களுக்கு வராதவர்களின் அவர்களது வீடு, பணிபுரியும் இடத்துக்கே சென்றும் மதிப்பீடு பணி நடத்தப்பட்டது. இப்பணி, ஜூலை 31 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டியில் நடைபெற்ற மதிப்பீட்டுப் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது, மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago