கட்டணம் செலுத்தி 7 மாதங்களாகியும் குடிநீர் இணைப்பு வழங்காததால், கரூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சியைச் சேர்ந்தது முத்துநகர், என்.எஸ்.பி. நகர். இப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதிய குடிநீர் இணைப்பு கேட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் கட்டணம் செலுத்திய நிலையில் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதியைச்சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கட்டணம் செலுத்திய 7 மாதங்களாகியும் புதிய குடிநீர் இணைப்பு வழங்காததைக் கண்டித்தும், புதிய இணைப்பு வழங்கக் கோரியும் இப்பகுதி மக்கள் காதப்பாறை ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் கிருபாவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், குடிநீர் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களிடம் ஊராட்சி மன்றத் தலைவர் கிருபாவதி உறுதி அளித்தார். இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago