தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டில் முதலாண்டு இளநிலை பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in அல்லது www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக ஆன்லைன் மூலம் ஆக.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள், ‘இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை- 6’ என்ற பெயரில் ஜூலை 25-ம் தேதிக்குப் பின் பெற்ற வங்கி வரைவோலையை கல்லூரி சேர்க்கை உதவி மையத்தில் செலுத்தலாம்
விண்ணப்பிக்கும் போது தங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் தயார் செய்து பின்பு மாணவ,மாணவிகளின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும். எனவே, மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கி. மாரியம்மாள், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி, ஜெயங்கொண்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராசமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago