தண்டராம்பட்டு அருகே தரடாப்பட்டு கிராமத்தில் - இரு தரப்பினர் இடையே கலவரத்தில் : 50-க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் சேதம் : எஸ்.பி., பவன்குமார் ரெட்டி தலைமையில் காவலர்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

தண்டராம்பட்டு அருகே இரு தரப்பி னர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, எஸ்பி பவன்குமார் ரெட்டி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக் கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப் பட்டு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் குடும்பங் கள் வசித்து வருகின்றனர்.

முன்விரோத தகராறு

இந்த கிராமத்தைச் சேர்ந்த கவுஸ் மற்றும் இனாயத்துல்லா என்பவர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. பல ஆண்டுகளாக இருந்து வரும் பகையால் அவ்வப்போது இரு தரப்பினர் இடையே ஏற்படும் தகராறை காவல் துறையினர் சமரசம் செய்து வந்துள்ளனர்.

20 பேர் படுகாயம்

இந்நிலையில், கவுஸ் தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவரின் குடும்ப திருமணம் இன்று (29-ம் தேதி) தரடாப்பட்டு கிராமத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, ஊர் ஜமாத்திடம் நேற்று பிற்பகல் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்ட கவுஸ் தரப்பினருக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஏற்பட்ட வாக்குவாதம் இருதரப்பினர் இடையே கைகலப்பாக மாறியுள்ளது. பின்னர், இரு தரப்பினரும் வீடுகள், கடைகளை மாற்றி மாற்றி உடைத்து கலவரத்தில் ஈடுபட தொடங்கினர். இதில், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் சேதம் அடைந்தன. இந்த கலவரத்தில் ஒரு கார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரு தரப்பிலும் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

காவல் துறையினர் முகாம்

இந்த தகவலை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் தரடாப்பட்டு கிராமத்தில் குவிக்கப் பட்டனர். மேலும், கிராமம் முழுவதும் காவல் துறையினர் முகாமிட்டு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE