தமிழகத்துக்கென தனி ஏற்றுமதி கொள்கை உருவாக்க வேண்டுமென, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (FIEO) தலைவர் ஏ.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்த அவர், கரோனா நெருக்கடி காலத்திலும், பதவியேற்ற இரண்டு மாதத்தில் தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, சுமார் ரூ.28 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் 40 திட்டங்களையும், புதிய வேலைவாய்ப்பையும் தமிழகத்துக்கு கொண்டுவந்ததற்காக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை வரும் 2030-ம் ஆண்டில் அடைய ஏதுவாக, சில கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்ததாக ஏ.சக்திவேல் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "தமிழ்நாடு மாநிலத்துக்கென தனி ஏற்றுமதி கொள்கையை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் என்ற தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆயத்த ஆடை ஜவுளித் துறை உதிரிபாகங்கள் உற்பத்தி பூங்கா, தையல் இயந்திர பூங்கா மற்றும் கனரக ஜவுளி இயந்திர பூங்கா, மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா, செயற்கை இழை ஆடை உற்பத்தி பூங்கா ஆகியவற்றை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அமைக்க வேண்டும்.
ஜவுளித் தொழில் உலகளவில் போட்டித்தன்மையுடனும், பெரிய முதலீட்டை ஈர்க்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு முதலீட்டு ஜவுளி பூங்காக்கள் (மித்ரா) திட்டத்தின் கீழ், மேற்கண்ட பூங்காக்களை அமைக்க வேண்டும். துறைமுகங்களில் மேம்பட்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். கோவை விமான நிலையத்துக்கு நேரடி சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக, புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். திருப்பூர் நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனையின் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கு அருகே குடியிருப்பு வசதியை அமைத்து தர வேண்டும். பணிபுரியும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி தங்கும் விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும்" என்னர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago