உதகையில் வீரிய ரக முட்டைகோஸ் பயிரில் பூச்சி பரவலை தடுக்கும் வகையில், தோட்டக்கலைத் துறை சார்பில் மஞ்சள் ஒட்டுப்பொறி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து தெளிக்கும் செலவு குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டைகோஸ் செடியில் கொண்டை நோய் பரவலால், முட்டைகோஸ் விளைச்சல் முற்றிலும் பாதித்தது. இதை எதிர்கொள்ளும் வகையில் வீரிய ரக டெக்கில்லா முட்டைகோஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. நஞ்சநாடு தோட்டக்கலை பண்ணையில் இந்த ரக நாற்றுகள் நடவு செய்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 5 விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 20,000 நாற்றுகள் வழங்கப்பட்டன. இந்த நாற்றுகளை, கடந்த மார்ச் மாதம் விவசாயிகள் நடவு செய்துள்ளனர்.
முட்டைகோஸ் செடிகளை பூச்சிகள் தாக்காத வகையில், தோட்டக்கலைத் துறை மூலம் மஞ்சள் ஒட்டுப்பொறி அட்டை வழங்கப்பட்டதால், விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது ‘‘மஞ்சள் ஒட்டுப்பொறி அட்டை மூலம் பூச்சிகளை எளிதில் கட்டுப்படுத்த முடிவதால், பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதற்கான செலவு குறைந்துள்ளது’’ என்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது:
மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டையை, விவசாயிகளே தயாரித்து பயன்படுத்தலாம். இதற்கு பிளைவுட் அட்டையில் மஞ்சள் நிற எனாமல் பெயின்ட்டை பூசி உலர வைத்து, அது உலர்ந்ததும் மேற்பரப்பில் வெள்ளை கிரீஸ் அல்லது சாதாரண பசையைத் தடவி மூங்கில் குச்சி உதவிகொண்டு, செடிகளின் இலைப்பரப்புக்கு மேலே ஏக்கருக்கு 6-8 இடங்களில் வைக்க வேண்டும்.
இதன்மூலம் சாறு உறிஞ்சும் வெள்ளை ஈ, இலையை சுரண்டும் பூச்சி ஆகியவை மேற்பரப்பிலுள்ள பசையில் ஒட்டிக்கொள்ளும். அதிக அளவில் பூச்சிகள் ஒட்டிய பிறகு சூடான வெந்நீரில் சிறிது நேரம் அட்டையை ஊற வைத்து, பூச்சிகளை அகற்றிவிட்டு, மீண்டும் அதை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago