திருப்பூர் புஷ்பா திரையரங்க வளைவில் - கடைகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் பேருந்துகள் : போக்குவரத்து காவல் துணை ஆணையரிடம் புகார்

By செய்திப்பிரிவு

புஷ்பா திரையரங்க வளைவில் கடைகள், இருசக்கர வாகனங்களுக்கு இடையூறாக பேருந்துகள் நிறுத்தப்படுவதாகக் கூறி, திருப்பூர் போக்குவரத்து காவல் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் - அவிநாசி சாலை புஷ்பா திரையரங்க பகுதி அனைத்து வணிக நிறுவனங்கள் சார்பில், போக்குவரத்து காவல் துணை ஆணையர் பெ.ரவியிடம் அளித்த மனுவில், "புஷ்பா திரையரங்க பகுதியானது, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் செயல்படும் இடம். இப்பகுதியில் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள், ரத்த பரிசோதனை நிலையம், மருந்துக்கடை, பேக்கரிகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள், வங்கிகள் மற்றும் பல்வேறு வகையான அமைப்புகள், வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. புஷ்பா திரையரங்க பேருந்து நிறுத்தமானது, கோவை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், உதகை உட்பட பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்களை ஏற்றிச் செல்லும் நிறுத்தமாகவும் உள்ளது. பேருந்து வந்தவுடன் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு உடனடியாக புறப்பட்டுச் செல்வதுதான் நடைமுறை. ஆனால், இங்கு பேருந்து நிலையம்போல நீண்ட நேரம் நிறுத்திவைத்துவிட்டு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், உணவருந்தும் இடமாகவும் மாற்றிவிட்டனர்.

பேருந்து நிறுத்தத்தை பேருந்து நிலையமாக மாற்றிவிட்டார்கள். சாலையோரத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த போக்குவரத்து போலீஸாரால் கோடுகள் போடப்பட்டுள்ளன. கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மக்கள், மேற்குறிப்பிட்ட கோட்டுக்குள் நிறுத்திச் செல்கின்றனர். பேருந்தை ஓட்டி வருபவர்கள், போலீஸார் போட்டுள்ள அந்த கோட்டின் அருகிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், இருசக்கர வாகனங்களை எடுக்க முடியாமல் நாள்தோறும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக சில நேரம் வாகன ஓட்டிகள், வணிகர்களுக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் வாக்குவாதம் எழும் சூழலும் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 381-ல் அமைந்துள்ள இந்த சாலையில், தினமும் லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. எனவே, பேருந்துகளை வேறு பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வகையான வரிகள் செலுத்தி, உள்ளாட்சி நிர்வாகத்துக்கு சொத்து வரி, தொழில் வரி செலுத்தி, கடை வாடகை கொடுத்து பல்வேறு நெருக்கடியில் தொழில்நடத்தி வரும் எங்களுக்கும், கடைகளுக்கு வந்து செல்லும் பயணிகளுக்கும் இடையூறு இல்லாமல் பேருந்தை பயணிகளை ஏற்றியவுடன், விரைவாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE