திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்க செயற்குழுக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
சங்கத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சங்கர், துணைச் செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்டண உயர்வு பேச்சு தொடங்குவது தொடர்பான சைமா சங்கத்தின் பதில் கடிதம் குறித்து, சங்க செயலாளர் நந்தகோபால் பேசினார்.
எரிபொருள், நூல் விலை உயர்வால் பவர்டேபிள் நிறுவனங்களில் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முடிந்து 9 மாதங்களாகிறது. பவர்டேபிள் நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றன. சில சிறிய உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், பவர்டேபிள் கட்டணத்தை உயர்த்தி வழங்கி வருகின்றன. ஆனால், பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே சம்பள உயர்வு வழங்க முடியும் என்கின்றன.
கட்டண உயர்வு வழங்க மேலும் தாமதித்தால், பவர்டேபிள் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
அனைத்து ஆடை உற்பத்தி நிறுவனங்களும் கட்டண உயர்வு வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, நாளை (ஜூலை 28) முதல், பவர்டேபிள் நிறுவனங்கள் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. கட்டண உயர்வு வழங்காத பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பது நிறுத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago