சவுதி அரேபியா நாட்டில் இறந்த மானாமதுரையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி உடலை 55 நாட்களாகியும் தமிழகத்துக்கு கொண்டு வராததைக் கண்டித்து, அவரது உறவினர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
மானாமதுரை அருகே டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜேஸ்வரன் (35). இவருக்கு சவுந்தரம் (25) என்ற மனைவியும், ஜெகதீஸ்வரன் (5), யோகேஸ்வரன் (3) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந் நிலையில் குடும்ப வறுமை கார ணமாக 2018-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் கம்பி கட்டும் வேலை செய்தார்.
இந்நிலையில் ஜூன் 2-ம் தேதி பணியின்போது அவர் மீது கான்கிரீட் தடுப்பு விழுந்து இறந்தார். இதையடுத்து இறந்த தனது கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் கார்த்தி சிதம்பரம் எம்பி, தமிழரசி எம்எல்ஏ ஆகியோரிடம் சவுந்தரம் மனு கொடுத்தார்.
55 நாட்களாகியும் நடவடிக்கை இல்லாத நிலையில் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக சவுந்தரம், தனது குழந்தைகள், உறவினர்களுடன் மறியலில் ஈடுபட்டார். பிறகு அவர்கள் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து சவுந்தரம் கூறியதாவது: எனது கணவர் கான்கிரீட் தடுப்பு விழுந்துதான் இறந்தார் என சவுதியில் பணிபுரியும் அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இறப்புச் சான்றிதழில் மாரடைப்பால் இறந்ததாக குறிப் பிடப்பட்டுள்ளது.
தற்போது கணவரின் உடலில் கரோனா தொற்று இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அவரது இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவரது உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சவுதி நிறுவனத்திடம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago