கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது : மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா 3-ம் அலை வந்தால் எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கிருஷ்ணகிரியில் தெரிவித்தார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சுகாதார பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முதலில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று 3-ம் அலை முன்னேற்பாடு பணிகள், நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி வழங்கும் முகாம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 13 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கலன் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது:

கரோனா 3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 62 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13 மேம்படுத்தப்பட்டவை. அவற்றில் தமிழகத்திலேயே முன்மாதிரியாக, 10 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் தலா 30 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா 3-ம் அலை வரக் கூடாது என்பதே அனைவர் விருப்பம். இருந்தாலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுவதால் அவர்கள் சிகிச்சை பெறும் வகையில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மக்களை தேடி மருத்துவம் என்ற உன்னத திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி அல்லது தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் மாநிலம் முழுக்க 1 கோடி மக்கள் பயன்பெறுவர். மலைக் கிராம மக்களின் தேவைகளை அறிந்து கொள்வதில் சிரமம் உள்ளதால் நாங்களே அங்கு சென்று அவர்களின் தேவைகளை கேட்டு நிறைவேற்ற உள்ளோம். கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வேகப்படுத்தப்படவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப் பட்ட 66 பேரில் 64 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பு அண்மைக் காலமாக நாள்தோறும் குறைந்து வருகிறது. இருப்பினும், கடந்த 4 நாட்களாக அதே எண்ணிக்கையில் குறையாமல் உள்ளது. எனவே, அனைவரும் போதிய விழிப்புடன் இருக்க வேண்டும். கரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இரு அமைச்சர்கள் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர், போலுப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். பின்னர், மலைக் கிராம மக்களுடன் அமைச்சர்கள் நேரில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிகளில், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, எம்எல்ஏ-க்கள் மதியழகன், ஒய்.பிரகாஷ், ராமச்சந்திரன், காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, பொது சுகாதார இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்