பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரக் கோரி வணிகர் சங்கம் விரைவில் கடையடைப்பு போராட்டம் நடத்தும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனைச் செய்யக்கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுக்க உறுதிமொழி எடுத்து வருகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வகை பொருட்கள் 100 சதவீதம் இல்லை என 2 தினங்களில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து உறுதிமொழி எடுக்க உள்ளோம்.
லாரிகள் மூலமே இவ்வகை பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே, லாரி உரிமையாளர் சங்கத்தில் முறையிட்டு இதுபோன்ற பாரங்களை ஏற்றக் கூடாது என வலியுறுத்தி உள்ளோம். வெளியூர்களில் இருந்து வரக்கூடிய இவ்வகை பொருட்களை குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மொத்த வியாபாரமாக செய்கின்றனர். அவர்களை கண்காணித்து கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
மொத்த வியாபாரிகள் பட்டி யலை வணிகர் பேரவை சார்பில் தயாரித்து முதல்வர் கவனத்துக்கு அளிக்க உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வராவிட்டால் எங்கள் அமைப்பின் ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவெடுத்து தமிழகத்தில் கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago