வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் - 2-ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு தொடக்கம் :

By செய்திப்பிரிவு

வேலூர், தி.மலை மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 10,906 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி மற்றும் உடல் தாங்கும் திறன் தேர்வு நேற்று தொடங்கியது.

அதன்படி, வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது. இதில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3,080 பேர் பங்கேற்க உள்ளனர். தினசரி 500 பேர் வீதம் தேர்வில் பங்கேற்க உள்ளனர். தேர்வில் பங்கேற்பவர்களிடம் கரோனா தொற்று இல்லா சான்று பெற்ற பிறகே விளையாட்டரங்கில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் தேர்வு தொடங்கியது.

இதில், தகுதித் தேர்வில் பங்கேற்க வந்தவர்களின் அசல் கல்வி சான்றுகள் சரிபார்ப்பு பணியுடன் உயரம் மற்றும் மார்பளவு அளக்கப்பட்டு 100 அல்லது 1,500 மீட்டர் ஓட்டத் தேர்வு நடைபெற்றது.

முதல் நாள் தேர்வில் பங்கேற்க 500 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில் 413 பேர் பங்கேற்றனர். 87 பேர் பங்கேற்கவில்லை. உடற்கூறு அளத்தல் மற்றும் ஓட்டத் தேர்வில் 80 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 333 பேர் இரண்டாம் கட்ட உடல் தாங்கும் திறன் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை

இரண்டாம் நிலை காவலர் களுக்கான உடற் தகுதி தேர்வு திருவண்ணாமலை ஆயுதபடை மைதானத்தில் நேற்று தொடங்கியது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தி.மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,646 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தினசரி 500 பேர் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரி பார்த்தல், மார்பளவு மற்றும் உயரம் அளவீடு, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவை என முதற்கட்ட உடற்தகுதி தேர்வுநடத்தப்படுகிறது. முன்னதாக, கரோனா மருத்துவ பரிசோதனையில், தொற்று இல்லை என மருத்துவ சான்று பெற்று வந்த இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நுழைவு பகுதியில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கிருமி நாசினி வழங்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். உடற்தகுதி தேர்வு நடைபெறும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மேலும், 25 வீடியோ கேமரா மூலமாக, தேர்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆயுதப்படை டிஐஜி கயல்விழி மேற்பார்வையில் உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஒரு வாரத்துக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்