உதகை நகரில் தினமும் 36 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, நகராட்சி வாகனங்கள் மூலம் குப்பை சேமிப்புக் கிடங்குக்கு எடுத்து செல்லப்படுகிறது. தற்போது கரோனா காலம் என்பதால் 26 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி கடந்த 2 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உதகை மார்க்கெட்டில் இறைச்சிகடை, துணிக்கடை, காய்கறி கடை,மளிகைக் கடை, காலணி கடைகள் என 1,000-க்கும் மேற்பட்ட கடைகள்அமைந்துள்ளன. மார்க்கெட் பகுதியை சுற்றிலும் பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: தற்காலிகமாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் சம்பளத்தை உடனடியாக வழங்கிவிட்டு,அதன்பின் நகராட்சியில்ஒப்பந்ததாரர் பெற்றுக்கொள்வதுவழக்கம். அதற்கு மாறாக ஒப்பந்ததாரர்கள் செயல்பட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 23-ம்தேதியன்று அனைத்து ஊழியர்களுக்கும் காசோலை மூலமாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கி விடுமுறை என்பதால், அவர்களுக்கு பணம் சேராமல் இருக்கலாம். திங்களன்று (இன்று) சம்பளம் கிடைத்துவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை எனக்கூறிகடந்த சில மாதங்களாக தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago