தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் மார்க்கெட் மற்றும் கடைகளில் போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் நகரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா உத்தரவின்பேரில் போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த 23, 24-ம் தேதிகளில் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்டபல்வேறு பகுதிகளில் காவல் துணை ஆணையர்கள் செ.அரவிந்த், பி.ரவி ஆகியோர் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், சில்லறை விற்பனை கடைகள், மொத்த விற்பனை கடைகள் உட்படபல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 32 கடைகளில் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 20 கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது. மேலும், 6.5 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள், கஞ்சா பதுக்கி வைத்திருப்போர், விற்பனை செய்வோரை கண்டறிய காவல் ஆணையர் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளதன் பேரில், திருப்பூர் - பல்லடம் சாலையிலுள்ள பெட்டிக் கடைகள், மளிகை கடைகள், மொத்த விற்பனை கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் நேற்று போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மார்க்கெட்டில் மொத்த கடைகளின் விவரம், கடை உரிமையாளர்கள் விவரம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா, அந்த கடைகளில் என்னென்ன பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்பனை நடைபெறுகிறதா என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், புகையிலை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது.
தடைக்கு முன் ரூ.5, ரூ.10-க்கு விற்கப்பட்ட போதை புகையிலை பாக்கெட்டுகள், தற்போது பதுக்கிவைக்கப்பட்டு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இளைஞர்கள் நலன் கருதியும், அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். காவல் துறையினருடன், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினரும் இணைந்து பணி செய்து வருகின்றனர். வரும் நாட்களில் இந்த நடவடிக்கை தொடரும்" என்றனர்.
இதேபோல, மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, பல்லடம், பெருமாநல்லூர், மங்கலம், சாமளாபுரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங் சாய் உத்தரவின்பேரில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிராக மாவட்ட காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கடைகளில் நேற்று விவரங்களை சேகரித்த மாநகர போலீஸார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago