சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் - தென்னம்பாளையத்தில் மீன் வாங்க திரண்ட மக்கள் :

By செய்திப்பிரிவு

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றாமல், திருப்பூர் தென்னம்பாளையம் மீன் சந்தையில் நேற்று அதிகளவில் பொதுமக்கள் திரண்டனர்.

திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள சந்தையில் உழவர் சந்தை தனியாகவும், மொத்த காய்கறிவிற்பனை சந்தை தனியாகவும் செயல்படுகிறது. அதோடு மீன் சந்தை, இறைச்சி விற்பனைஉள்ளிட்டவையும் நடைபெறுகிறது.

அதிகமான சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சந்தைக்கு வந்து வாங்கி செல்வது வழக்கம். கரோனா பாதிப்பால், சந்தையில் விற்பனைக்கு கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகளுக்கு வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் மாநகராட்சி மற்றும் போலீஸாரால் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று தென்னம்பாளையம் மீன் சந்தையில் சில்லறை வியாபாரிகளைக் காட்டிலும், அதிகளவில் பொதுமக்கள் திரண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தையின் உள்ளே சில்லறை வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையை ஒட்டியுள்ள பகுதியில் வியாபாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், அதிகாலையில் இருந்தே மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது.

சந்தை அருகே குறுகலானபகுதியில் மீன் வியாபாரம் நடைபெற்றதால், சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது அங்கு கேள்விக்குள்ளானது. மேலும், மீன் வாங்க வந்த பலரும் முகக்கவசம் அணியவில்லை என்பதும் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

காய்கறி வியாபாரத்துக்கும் போலீஸார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். சில்லறை வியாபாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், சந்தை வளாகத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

இதேபோல, புதுமார்க்கெட் வீதியில் ஜவுளி, தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருப்பூர் தென்னம்பாளையத்தில் நேற்று சமூக இடைவெளி இல்லாமல் மீன் வாங்க திரண்ட பொதுமக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்