பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தால் பிரபல தனியார் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாத மாணவி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் சமரச முயற்சியினால் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
திருவள்ளூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில், மனுதாரர் ஒருவர் மனு அளித்தார். அதில், “எனது பேத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பில் பயின்று வந்தார். கரோனா பேரிடரால் பள்ளிமூடப்பட்டதில் இருந்து ஆன்லைன் வகுப்பில் பயின்று வந்தார். திடீரென்று, ஒருநாள் எனது பேத்தியை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்ததில் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் பேத்தியை நீக்கி விட்டதாக தெரிவித்தனர். இதனால் எனது பேத்தியின் எதிர்காலம் பாதிக்கப்படும். என்னுடைய அரவணைப்பில்தான் என் பேத்தி இருக்கிறார். நான் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர். எனது ஓய்வுக்கால பணப் பலன்கள் வருவதற்கு காலதாமதம் ஆவதால், பள்ளிகட்டணம் செலுத்த இயலவில்லை” என மனுவில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முதல்வர், மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மனுதாரர் ஆகியோர் திருவள்ளூர், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி முன்பு ஆஜராகினர். மக்கள் நீதிமன்றத்தின் சமரச முயற்சியினால் பள்ளி நிர்வாகம் மாணவியை உடனடியாக பள்ளியில்சேர்ப்பதாகவும், பள்ளிக் கட்டணம்செலுத்த அவகாசம் தருவதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதேபோல், மின் விளக்கு வசதி, சாலை வசதி மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வேண்டி மனுக்கள்பூண்டி ஒன்றியம், குன்னவாசல் அஞ்சல், காந்தி கிராம மக்களிடமிருந்தும் மற்றும் பேருந்து வசதி வேண்டி சென்றான்பாளையம் பஞ்சாயத்து மற்றும் ஊத்துக்கோட்டை வெங்கடாபுரம் கிராம பொதுமக்களிடமிருந்தும், பேருந்து நிறுத்தம் வேண்டி திருத்தணி குன்னத்தூர் கிராம பொதுமக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்பட்டன. தற்போது மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago