மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சி.முதல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ந.சேகர் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் அ.க.வடிவேல், பொருளாளர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் அ.ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில், தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பது. மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்விச் சேர்க்கையிலும், அரசுத் துறை வேலைவாய்ப்புகளிலும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டு முதல் 15 சதவீதமாக உயர்த்தி வழங்குவதுடன், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். தேவைப்படும் பள்ளிகளுக்கு புதிய பணியிடங்களை உருவாக்கி, உடனே பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
ஆதிதிராவிட நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். மேல்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர்களின் இதரப் பணிச் சுமைகளைக் குறைக்க வேண்டும். பள்ளிகளில் அலுவலகக் கணினி பணியாளர் என்ற பணியிடத்தை உருவாக்கிப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago