‘திசை காட்டும் திருச்சி' திட்டத்தின்படி நடத்தப்படும் இணையவழி வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 15,231 பேர் பதிவு செய்துள்ளதாக திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி இளையோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக ‘திசை காட்டும் திருச்சி’ என்ற இணையவழி வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 15,231 பேர் பதிவு செய்துள்ளனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும், நேர்காணலை எதிர் கொள்ளும் முறைகள் பற்றி பயிற்றுவிக்கவும், அறிவுத் தகவல்களைப் பகிரவும் துறைசார் நிபுணர்களைக் கொண்டு ஜூம் செயலி மற்றும் யூ டியூப் மூலம் ஜூலை 23-ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் ஒரு வாரத்துக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
150-க்கும் அதிகமான தொழில் வணிக நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்கின்றன. இதில், 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக டிசம்பரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். நேர்காணலின்போது, ஆங்கிலத்தில் இயல்பாக உரையாடும் திறமையை வளர்த்துக்கொள்ள, செப்டம்பர் முதல் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago