புதுப்பாளையம் ஒன்றியத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடி மதிப்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சி காமராஜர் நகரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெறுகிறது. நாகப்பாடி கிராமத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 23 வீடுகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் தனி நபர் கழிப்பறை கட்டும் பணி நடைபெறுகிறது. வீரானந்தல் ஊராட்சியில் ரூ.5.25 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி, பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ.1.70 லட்சம் மதிப்பில் 18 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்தப் பணிகளை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
மேலும் அவர், வீரானந்தல் கிராமத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி பெருமாளை அழைத்து, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து கேட்டபோது, அதுபோன்ற பலன்களை தான் பெறுவது இல்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, அவருக்கு சிறு குறு விவசாயி சான்று மற்றும் பிரதமரின் விவசாய நிதி உதவித் தொகை ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.71.08 லட்சம் மதிப்பில் நடைபெறும் 2.2 கி.மீ., தொலைவுக்கு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
அப்போது, கூடுதல் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago