ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதியான உலமாக்கள் மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 98 வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு ச்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25 ஆயிரம் என இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருப்பதுடன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உலமாக்களாக 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.
இரு சக்கர வாகனம் வாங்க தகுதியுள்ள நபர்கள் தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமான சான்றிதழ், புகைப்படம், மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, ஜாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வித் தகுதிச்சான்று, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், வக்ஃபில் பணி புரிவதற்கான சான்று, வாகனத்தின் விலைப்புள்ளியை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய ஆவணங்களுடன் ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago