நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் - ‘நியூமோகாக்கல் கான்ஜூகேட்’ தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனையில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு ‘நியூமோகாக்கல் கான்ஜூகேட்’ தடுப்பூசி செலுத்தும் பணியைமாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குழந்தைகளுக்கு நியூமோகாக்கல், நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் நியூமோகாக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இத்தடுப்பூசி குழந்தைகளுக்கு 6-வது வாரம், 14-வது வாரம் மற்றும் 9-வது மாதம் என மூன்று தவணைகளாக செலுத்தப்படும்.

நமது மாவட்டத்தில் பிறந்து6 வாரங்கள் ஆன மொத்தம் 167 குழந்தைகளுக்கு, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும்ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் கால அட்டவணைப்படி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அனைத்து கர்ப்பிணிகள்மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தாமாக முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பழனிசாமிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

பல்லடம் வட்டம் அருள்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்தார்.

இதில் அமைச்சர் பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் 29ஆயிரத்து 37 குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிமோனியாவால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க உதவும்.

அனைத்து துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில், அரசின் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது" என்றார்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்