கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு வரும் 26-ம் தேதி தண்ணீர் திறக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். நிகழாண்டில் ஜூன் மாதம் அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக இருந்ததால் நீர் திறப்பு தள்ளி போனது.
கடந்த 15 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம் நேற்று 46.85 அடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள், கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக வருகிற 26-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 22-ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஅள்ளி, தளிஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி உட்பட 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago