தஞ்சாவூர் மாவட்டம் காவலர்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன்(36). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது சரக்கு ஆட்டோவில் நேற்று கொண்டு சென்ற வைக்கோல் கட்டுகளை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் இறக்கிவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, கிள்ளுக்கோட்டை அருகே ராஜசேகரனின் ஆட்டோவை மறித்த சிலர், அரசுப் பள்ளியில் சத்துணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த 25 மாணவ, மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதற்கு ராஜசேகரன் மறுத்த நிலையில், அங்கிருந்தவர்கள் ராஜசேகரனிடம் தகராறு செய்து, மாணவ, மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி விட்டனர்.
மாணவ, மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்த ராஜசேகரன், அவர்கள் இறங்க வேண்டிய பகுதியை தாண்டி சிறிது தொலைவுக்கு சென்று ஆட்டோவை நிறுத்த முயன்றுள்ளார்.
ஆனால், அதற்குள்ளாக ஆட்டோவிலிருந்து மாரிமுத்து(13), ரம்யா(13), சரண்யா(13), சசிரேகா(12), கலைவாணி(13) ஆகிய 5 பேரும், தங்களை கடத்திச் செல்வதாக கூறி, கூச்சலிட்டபடி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில், அவர்கள் காயமடைந்தனர்.
பின்னர் ஆட்டோவை ஓரமாக நிறுத்திய ராஜசேகரன், காயமடைந்த மாணவ, மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அப்போது அங்கிருந்தவர்கள் ராஜசேகரனிடம் தகராறு செய்து, அவரை தாக்க முயன்றுள்ளனர்.
பின்னர், ராஜசேகரன் ஆட்டோவை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையில் உள்ள மாணவ, மாணவிகளைப் பார்த்து நடந்த விவரங்களை மருத்துவர்கள், போலீஸாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago