அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
அதிக குழந்தைப்பேறை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாட்டின் சராசரியைவிட அதிகமாக உயர் வரிசை பிறப்பு எனும் அதிக குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை பெண்களிடம் உள்ளது. தற்போதும் கொல்லிமலை கிராமங்களில் அதிகபட்சமாக 5 குழந்தை, நாமகிரிப்பேட்டை பகுதியில் 4 குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் உள்ளனர்.
இது வருத்தப்படக் கூடிய செயல். அதிக குழந்தைபேறின் காரணமாக பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிரசவத்தின்போது உயிர்பாதுகாப்பு வழங்க முடியாத சூழல் மருத்துவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் 3 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் அதிக குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள், அவர்களது கணவர், குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜெயந்தி, நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தயாள் சங்கர், மகப்பேறு மருத்துவர் செல்வாம்பிகை, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago