குறைந்த விலையில் முட்டை வழங்குவதாக அறிவிப்பு - பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை அரசு தடுக்க வேண்டும் : முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நாமக்கல்லில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற சங்கத் தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் முன்னணியில் உள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இங்கிருந்து தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு விற்பனைக்காகவும் தினசரி முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது ஒரு முட்டையின் உற்பத்தி செலவு ரூ.4.50 முதல் ரூ.4.80 வரை ஆகிறது. முட்டை விற்பனை விலை ரூ.5.15 என என்இசிசி நிர்ணயம் செய்துள்ளது. கோழித் தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வால் முட்டை உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைன் மூலம் முன் பணம் செலுத்தினால் ஆண்டு முழுவதும் ஒரு முட்டை ரூ.2.24-க்கு பொது மக்களின் வீடுகளுக்கே விநியோகம் செய்வதாக விளம்பரம் செய்து வருகிறது.

இது சாத்தியமற்ற ஒரு திட்டமாகும். இதை நம்பி பொதுமக்கள் யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். உற்பத்தி விலையை விட பாதி விலையில் முட்டைகளை வழங்குவது என்பது யாராலும் முடியாத செயல்.

எனவே, தமிழக அரசு இது குறித்து உடனடியாக விசாரணை செய்து பொதுமக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும். விரைவில் எங்கள் சங்க பொதுக்குழுவை கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சங்க இணைச் செயலாளர்கள் ஆனந்த், சசிகுமார், இயக்குநர்கள் துரை, ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE