சிவாயம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மொத்த மாணவர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளதால், பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடந்த 1911-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 2007-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் தற்போது, மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நூறை கடந்தது. அதற்கடுத்த ஆண்டான 2018-ல் 150-ஐ கடந்தது. நடுநிலைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டபோது, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டன.
கடந்தாண்டு மொத்த மாணவர் எண்ணிக்கை 486 என இருந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக அரசுப் பள்ளிகளை மாணவர்கள் நாடி வருவதால், நிகழாண்டு புதிதாக 113 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதையடுத்து மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் பயின்ற 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால், இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் தா.தாரகேஸ்வரி கூறியது: 2018-ம் ஆண்டு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 390 என இருந்தபோது, 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் 10 வகுப்புகள் இருந்த நிலையில், 5 இடைநிலை ஆசிரியர்கள், 3 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். இதனால் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போதே 3 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது மாணவர் எண்ணிக்கை 538 என அதிகரித்துள்ள நிலையில் ஒரு தலைமை ஆசிரியர், 5 இடைநிலை ஆசிரியர்கள், 3 பட்டதாரி ஆசிரியர்கள் என 9 பேர் மட்டுமே உள்ளனர். பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் 4 முன்னாள் மாணவிகள் ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டிருந்தனர். மழலையர் வகுப்புகள், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மொத்தம் 15 வகுப்புகள் உள்ளன. இவர்களுக்கு பாடம் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லை. எனவே, கூடுதலாக 4 இடைநிலை ஆசிரியர்கள், 2 பட்டதாரி ஆசிரியர்கள் என 6 கூடுதல் பணியிடங்கள் வழங்க வேண்டும். இல்லாவிடில், பள்ளிகள் திறக்கப்பட்டால் தமிழ், ஆங்கில வகுப்புகள், மாணவர்களை கையாளுவதில் பெரிதும் சிரமம் ஏற்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago