பெரம்பலூர் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி வீட்டில் பூஜை செய்து, வியாபாரியை ஏமாற்றிய ஜோதிடர் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி பிரபு(39). இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அண்மையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற ஜோதிடரை சந்தித்து, வறுமையிலிருந்து மீள வழிகேட்டிருக்கிறார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு பிரபுவின் வீட்டுக்கு வந்து பார்வையிட்ட ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி, பிரபுவின் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதையெடுப்பதற்கான பூஜைக்கு ரூ.50,000 செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ரூ.5 ஆயிரம் முன்பணம் பெற்றுக்கொண்ட ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் தனது நண்பர்களான சேலம் சங்ககிரியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி(39), திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கோட்டாத்தூரைச் சேர்ந்த பிரபாகர்(40) ஆகியோருடன் பிரபுவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு 3 அடி ஆழம் குழிதோண்டினால் புதையல் கிடைக்கும் என ஜோதிடர் கூறியிருந்த நிலையில், பூஜை செய்து 12 அடி ஆழம் வரை குழி தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. இதனால், குழி தோண்டும் பணியை நிறுத்தும்படி பிரபு கூறியிருக்கிறார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி, பேசியபடி ரூ.50,000 தராவிட்டால் வாய் பேச முடியாதபடி செய்துவிடுவேன் என்று பிரபுவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பிரபு, இதுதொடர்பாக பெரம்பலூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago