காவிரி-குண்டாறு திட்ட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்காக ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.
முதல்கட்டமாக காவிரி-தெற்கு வெள்ளாறு (புதுக்கோட்டை மாவட்டம்) வரை பணிகளை மேற்கொள்வதற்கு கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ரூ.331 கோடியில் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் 7 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குன்னத்தூர் உட்பட கால்வாய் வெட்டும் இடங்களை காவிரி-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிசா.மாரிமுத்து தலைமையில் ஏராளமான விவசாயிகள் அண்மையில் பார்வையிட்டனர். பின்னர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையையும் பார்வையிட்டனர்.
இதுகுறித்து மிசா.மாரிமுத்து கூறியபோது, “100 ஆண்டுகால கனவுத் திட்டத்தை தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் வரும் பட்ஜெட்டில் ரூ.1,000 கோடியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார்
சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கரூர் முருகேசன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஆர்.வி.முருகேசன், பொருளாளர் ஆர்.ஆனந்தன், திருச்சி மாவட்டத் தலைவர் பிரகாஷ் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago