புதுக்கோட்டை மாவட்டத்தில் - நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் 10 பேர் சஸ்பெண்ட் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, பணியாளர்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 93 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியிருப்பதாகவும், சில இடங்களில் கொள்முதல் பணியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மாநில நிர்வாக இணை இயக்குநர் சங்கீதா தலைமையிலான குழுவினர், தேங்கியிருந்த நெல் மூட்டைகள் அனைத்தையும் பல்வேறு இடங்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர், பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, வியாபாரிகளின் நெல் மூட்டைகள் அதிகம் இருந்ததும், முறையான சிட்டா அடங்கல் இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சங்கீதாவின் பரிந்துரையின்பேரில், 4 கொள்முதல் அலுவலர்கள், 6 பட்டியல் எழுத்தர்கள் என 10 பேர் கடந்த 2 நாட்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர் கூறியது:

வருவாய்த் துறையினர் வழங்கும் சிட்டா, அடங்கலை கொள்முதல் அலுவலர்களால் சரிபார்க்க இயலாது. எனவே, இதிலுள்ள குறைபாடுகளையும், உள்ளூரில் உள்ள சில்லறை வியாபாரிகள், அதே ஊரைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நெல்லை விலைக்கு வாங்கி, நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்திருப்பதையும் காரணம் காட்டி, பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்கு உரியது. இந்த நடவடிக்கைகளை உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE