நுண்ணீர் பாசனம் அமைக்க 100 % மானியம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி, பழப்பயிர் நுண்ணீர் பாசனம் அமைக்க, 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்களுக்கு, 11 ஆயிரத்து, 250 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைத்திட பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில், ரூ.111.49 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியமும், பெரு விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

நுண்ணீர் பாசனத்துக்காக குழாய்களை நிலத்தில் குழி எடுத்து பதிப்பதற்கு ஹெக்டருக்கு ரூ.3 ஆயிரம் வரை மானியம், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைக்க, ரூ.25 ஆயிரம் மானியம், மின் அல்லது டீசல் மோட்டார் வாங்குவதற்கு, ரூ.15 ஆயிரம் மானியம், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணற்றிலிருந்து பயிருக்கு நீரை கொண்டு செல்வதற்கு, ரூ.10 ஆயிரம் மானியம், தொட்டிகள் கட்டி தண்ணீரை சேமித்து நுண்ணீர் பாசனம் மேற்கொள்ள கன மீட்டருக்கு, ரூ.350 வீதம் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் இத்திட்டத்தில் மானியம் பெற கணினி பட்டா, அடங்கல், நில வரைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்தப் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்