செங்கல்பட்டு மாவட்டத்துக்கு என தனியாக - புதிய தொழில் மைய அலுவலகம் திறப்பு : ஊரக தொழில் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய புதிய அலுவலகத்தை ஊரகதொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கினார்.

ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்டத்தில் தொழில் மைய அலுவலகம் இயங்கி வந்தது. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு என தனியாக புதிய அலுவலகம் ஏகாம்பரநாதர் தெருவில் திறக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 85 லட்சம் கடன் உதவி வழங்கினார்.

மானியத்துடன் கடன் வசதி

அப்போது அவர் பேசியதாவது: தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை அணுகி ஆலோசனைகள் பெற்று 25% முதல் 35% வரையிலான மானியத்துடன் கடன் வசதி பெற்று தொழில் தொடங்கி பயன் அடையலாம்.

இம்மாவட்டத்தில் வாகன உதிரி பாகங்கள் தயாரித்தல், தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி, உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் தொழில்கள்,மருந்து பொருட்கள் தயாரித்தல், ஏற்றுமதி தரத்தில் பர்னிச்சர் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் மற்றும் சாதனம் தயாரித்தல், அனைத்து உற்பத்தி சேவை தொழில் மற்றும் வியாபாரம் தொடங்குவது போன்றவற்றுக்கு ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழில் வணிகத் துறை கூடுதல் இயக்குநர்கள் ஏகாம்பரம், ஜெகதீஷ், செங்கல்பட்டு மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ஆர்.ரமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்