விழுப்புரம் ரயில்வே பள்ளியை மூட முடிவு : ஆட்சியரிடம் பெற்றோர் முறையீடு

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் கடந்த 97 ஆண்டுகளாக இயங்கி வரும் ரயில்வே பள்ளியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் செயலாளர் வெங்கடேசன் தலைமையில், விழுப்புரம் நகரவாசிகளும் பெற்றோரும் நேற்று ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் ரயில்வே பள்ளி கடந்த 1924-ம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் தொடங்கப்பட்டு பல துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்கிய பாரம்பரிய மிக்க பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக பள்ளியில் சேர விரும்பிய மாணவர்களுக்கு எந்தவொரு சேர்க்கையும் நடைபெறவில்லை. ஒவ்வொரு வருடமும், படிப்படியாக வகுப்புகளை மூடிவிட்டனர். தற்போது 9, 10-ம் வகுப்புகளில் படித்து வரும் 17 மாணவர்களையும் கட்டாய மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வேறு பள்ளியில் சேர பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. .

இந்நிலையில், பெற்றோரால் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பள்ளியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென உத்தரவு வந்தது. தொடர்ந்து பள்ளியை நடத்த அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், அப்போதே பள்ளி நிர்வாகம் கட்டிட பராமரிப்பை நிறுத்தியது. வகுப்பறைகளில் மேற்கூரையை பிரித்தல், குடிநீர் இணைப்பை துண்டித்தல், கழிப்பறை கதவுகளை நிரந்தரமாக மூடிவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டது. இதனால் சில மாணவர்கள் வேறு பள்ளிக்குச் சென்று விட்டனர். மீண்டும், பெற்றோரால் வழக்கு தொடரப்பட்டது.

இதனை எதிர்த்து ரயில்வே நிர்வாகம் மேல்முறையீடு செய்து, தீர்ப்பு வராத நிலையிலும், பெற்றோர் தரப்பில் மேல் முறையீடு செய்ய காலஅவசாகம் இருந்தபோதிலும் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் களை பணியிடை மாற்றம் செய்து ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக நிறுத்தியுள்ளது.

இந்த நெருக்கடியின் உச்சமாக வரும் 23-ம்தேதிக்குள் மாற்றுச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தி வரு கின்றனர். தவறும் பட்சத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன்கருதி பள்ளியை தொடர்ந்து நடத்த ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த அம்மனுவில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்