ரயில்வே கீழ்ப்பாலம் அமைக்கப்படுவதைக் கண்டித்து - அய்யனாபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள அய்யனாபுரம் கிராமத்தில் ரயில்வே கீழ்ப்பாலம் அமைக்கப்படு வதைக் கண்டித்து மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூதலூர் அருகே அய்யனாபுரம் கிராமத்தில் ரயில்வே கிராசிங் உள்ளது. இதில், மேம்பாலம் கட்டித் தருமாறு அந்த கிராம மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கீழ்ப்பாலம் கட்டப்படும் என 2020 -ம் ஆண்டு ஜனவரியில் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இதற்கான முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்தக் கீழ்ப்பாலம் கட்டப்படுவதால் நந்தவனப்பட்டி, காங்கேயம்பட்டி, தொண்டராயன்பாடி, வெண்டையம்பட்டி, மனையேரிப்பட்டி, மாரனேரி, கடம்பங்குடி, சோழகம்பட்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 30 கிராமப் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

மேலும், கீழ்ப்பாலம் கட்டப்பட்டால் கதிர் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல இயலாது. இதனால், ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. புயல் மற்றும் மழைக்காலத்தில் புதுக்கோட்டை மாவட்ட காட்டாற்றிலிருந்து வரும் தண்ணீர் அய்யனாபுரம் வாரியில் கலந்து, வெள்ளம் கரை புரண்டு ஓடும். இதன் காரணமாக கீழ்ப்பாலம் நீரில் மூழ்கும். இது, பொதுமக்களுக்குக் கடும் இடையூறை ஏற்படுத்தும். எனவே, கீழ்ப்பாலம் அமைத்தால் மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இந்தக் காரணங்களுக்காக இந்தப் பகுதியில் மேம்பாலம் மட்டுமே கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அய்யனாபுரம் ரயில் நிலையம் முன் அப்பகுதி மக்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு, காங்கேயம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். காங்கேயம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மு.ராஜா வரவேற்றார். பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவர்கள் தெய்வகண்ணி புண்ணியமூர்த்தி, கவிதா முத்துசாமி, எம்.அசோக்குமார், அம்பிகா, கனிமொழி சிவகுமார், முத்துசாமி, மயில்சாமி, உறுப்பினர் அருமைச்செல்வி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்