திருப்பூர் அரசு மருத்துவமனையில் : தற்காலிக பணிக்கு நேர்காணல் : 89 இடங்களுக்கு சுமார் 200 பேர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணிக்கு நேற்று நடைபெற்ற நேர்காணலில் 89 இடங்களுக்கு சுமார் 200 பேர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்காக, தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். ரேடியோகிராஃபர் 5 பேர், டயாலிசிஸ் டெக்னீசியன் 10 பேர், இ.சி.ஜி.டெக்னீசியன் 5 பேர், சி.டி.ஸ்கேன் டெக்னீசியன் 5 பேர், அனதீசியா டெக்னீசியன் 15 பேர், ஃபார்மாசிஸ்ட் 5 பேர், மருத்துவமனை தொழிலாளர்கள் 6 பேர் ஆகிய பதவியிடங்களுக்கான நேர்காணல், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். இதேபோல, லேப் டெக்னீசியன் 5 பேருக்கு மாத ஊதியம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். மருத்துவக் கல்லூரிக்கு 56 இடங்களுக்கு 90 பேர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் மற்றும் நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள் பணிகளுக்கு, தற்காலிகமாக மாதம் ரூ.12 ஆயிரம் வீதம், 6 மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்படி மருந்தாளுநர் 11 பேர், ஆய்வக நுட்புநர் 11 பேர், நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள் 11 பேருக்கு நேர்காணல் நடைபெற்றது. 33 இடங்களுக்கு 104 பேர் பங்கேற்றனர்.

திருப்பூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பாக்கியலட்சுமி, டீன் முருகேசன், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட மருத்துவ அலுவலர்கள் பலர், நேர்காணலில் பங்கேற்றவர்களின் திறன்களை மதிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்