கோயில்களில் திருவிழா, கூழ் வார்த்தலுக்கு தடை : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க கோயில் திருவிழாக்கள், ஆடி மாதத்தை முன்னிட்டு கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ள போதிலும் தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ளதால் அம்மன் கோயில் மற்றும் முருகன் கோயிலில் வழிபாடு செய்யும் பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்கத் தவறினால் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும். பக்தர்கள் கோயில்களில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள தடையில்லை. ஆடி மாதத்தில் திருவிழாக்கள், கூழ்வார்த்தல் மேற்கொள்ளக் கூடாது.

கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கோயிலுக்குள் செல்லும் முன் கிருமி நாசினி கொண்டு கைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். 100 ச.மீ. பரப்பளவில் 20 நபர்களுக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். பெரிய கோயில்களில் டோக்கன் முறைப்படி குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம்செய்ய வேண்டும். பொதுமக்கள்தேங்காய், பழம் செலுத்தி அர்ச்சனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. பூஜையின்போது அமர்ந்து தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

கரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யக் கூடாது. பஜனை பாடக் கூடாது. கோயில் குளத்துக்கு செல்லக் கூடாது. கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்கக் கூடாது. கோயிலுக்கு வருபவர்கள் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்