ஆதரவாளர்களுடன் பழனிசாமியை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. : ஈரோட்டில் மாவட்ட செயலாளர் பதவியில் மாற்றமா?

By எஸ்.கோவிந்தராஜ்

அதிமுக இணை ஒருங்கிணைப் பாளர் பழனிசாமியை, மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி தலைமையிலான நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். இதனால், ஈரோடு மாநகர், மாவட்ட செயலாளர் பதவியில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கமும், புறநகர் மாவட்ட செயலாளராக கே.சி.கருப்பணனும் உள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்ட கே.வி. ராமலிங்கம் தோல்வி யடைந்தார். அதன்பின்னர், கட்சியில் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, மொடக் குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் என 200-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை, சேலத்தில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வாகவும், அதிமுக மாநகர், மாவட்ட செயலாளராகவும் இருந்த சிவசுப்பிரமணியிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, கே.வி.ராமலிங்கத்திற்கு வழங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கே.வி.ராமலிங்கம் அப்பதவியை வகித்து வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால், சிவசுப்பிரமணிக்குவாய்ப்பு கிடைக்கவில்லை.எனினும், கூட்டணிக்கட்சியான பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வைத்தார்.

ஆனால், கே.வி.ராமலிங்கம் தேர்தலில் தோல்வியடைந்தார். ஈரோடு கிழக்குத் தொகுதியிலும், கூட்டணிக்கட்சியான தமாகா தோல்வியடைந்தது. இந் நிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கே.வி.ராமலிங்கத்தை மாற்ற வேண்டும் என பகுதி செயலாளர், முன்னாள் துணைமேயர் ,முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி ஆகியோர் வலியுறுத்துகின்றனர்.

அடுத்து நடக்கவுள்ள மாநகராட்சி தேர்தலில், மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இந்த பதவியை கைப்பற்றுவதில் மூவரும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

சிவசுப்பிரமணியின் நெருங் கிய நண்பராக இருந்த தோப்பு வெங்கடாசலம்,சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை, தனது ஆதரவாளர்களுடன் சென்று நேற்று சிவசுப்பிரமணி சந்தித்துள்ளார். இதனால் மாநகர் மாவட்ட செயலாளர் மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, என்றனர்.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியிடம் கேட்டபோது, மொடக்குறிச்சி தொகுதி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மரியாதை நிமித்தமாக இணை ஒருங்கிணைப்பாளரைச் சந்தித்து பேசினேன், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்