தஞ்சாவூரில் 5 பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற வேலைக்கார பெண் கைது : நகையை அடகுவைக்க உதவிய கணவரும் சிக்கினார்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகர் சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் அந்தோனிசாமி மனைவி ஜோஸ்பின்மேரி(65). இவரது மகன் பிராங்க்ளின் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். அந்தோனிசாமி இறந்துவிட்ட நிலையில், ஜோஸ்பின்மேரியும், பிராங்க்ளினும் தஞ்சாவூரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி வேலைக்குச் சென்ற பிராங்க்ளின், மறுநாள் (ஜூலை 15) தனது தாயை செல்போனில் தொடர்புகொண்டபோது, ஜோஸ்பின்மேரி போனை எடுக்கவில்லை. இதையடுத்து, வீட்டின் மற்றொரு பகுதியில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் ஜோஸ்பின்மேரி இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஊருக்கு திரும்பிய பிராங்க்ளின் தனது தாய் உடல்நலக் குறைவால் இறந்திருப்பதாகக் கருதினார். பின்னர், தனது தாய் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸார் வந்து, ஜோஸ்பின்மேரியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில், ஜோஸ்பின்மேரி கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, வீட்டில் வேலை பார்க்கும் மானோஜிப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியடென்சி(34) என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். இதில், ஜோஸ்பின்மேரியை ஆரோக்கிய டென்சி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை எடுத்துச் சென்றதும், பின்னர் ஜோஸ்பின்மேரியின் இறுதிச்சடங்கில் எதுவும் தெரியாததுபோல கலந்துகொண்டு அழுததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆரோக்கியடென்சியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மேலும், திருடிய நகைகளை அடகுவைக்க உதவியதாக ஆரோக்கியடென்சியின் கணவர் யோபேல் விக்டர் (எ) யோகேஷும் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்