கரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நேரத்தில் அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருந்தாலும், அரசு கூறிய அறிவுரைகளை பின்பற்றாத பொதுமக்களால் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உருவாகும் என சுகாதாரத்துறையினர் எச்சரித் துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கரோனா தடுப்பு பணி தொடர்பு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில், பல்வேறு உத்தரவுகளை ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, ‘‘தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீடித்துள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் கட்டுப் பாடுகளை பின்பற்றாமல் கூடி வருகின்றனர்.

இரு சக்கர வாகனம், கார்களில் செல்வோர் சிலர் முகக்கவசம் அணியாமல் சுற்றி வருகின்றனர். ஆட்டோக்கள், பேருந்துகளில் அதிக கூட்டத்தை காண முடிகிறது.

பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகளின் இது போன்ற அலட்சிய போக்கால் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணி தொடர்பு அலுவலர்கள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் திடீர் சோதனை நடத்த வேண்டும். அந்தந்த வட்டத்துக்கு உட்பட்ட வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், காவல் துறையினர் சுழற்சி முறையில் ரோந்துப்பணியில் ஈடுபடவேண்டும்.

முகக்கவசம் அணியாதவர் களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500, வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம். கரோனா தடுப்புப் பணிகளை சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், நகராட்சிஆணையாளர்கள், பேரூராட்சிசெயல் அலுவலர்கள், பிடிஓ-க்கள் கண்காணித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கையாக வழங்க வேண்டும்’’ என்றார்.

ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வட்டாட்சியர்கள் அனந்த கிருஷ்ணன் (ஆம்பூர்), மோகன் (வாணி யம்பாடி) மற்றும் காவல் துறையினர் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் கரோனா தடுப்புப்பணியில் நேற்று ஈடுபட்டனர்.

இதில், ஆம்பூர் பஜார், நேதாஜி ரோடு, உமர் ரோடு, புறவழிச் சாலையில் கரோனா விதிமுறை களை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.5,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்