அரசுப் பேருந்துகளில் அலைமோதும் கூட்டம் : திருப்பூர் மாவட்டத்தில் அச்சத்தில் தவிக்கும் பயணிகள்

அரசுப் பேருந்துகளில் நிற்க இடமின்றி அலைமோதும் கூட்டத்தால், திருப்பூர் மாவட்டத்தில் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில், பொதுப் போக்குவரத்தான அரசுப் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதில் போதியசமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டாலும், சில பேருந்துகளில் மட்டுமே அவை கடைபிடிக்கப்படுகின்றன. பல பேருந்துகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை.

திருப்பூர் மாவட்ட பயணி ஒருவர்கூறியதாவது: பேருந்துகளில் சமூக இடைவெளி என்பது பெரிதாககடைபிடிப்பதில்லை. பலரும் முகக் கவசங்களை தாடையில் மாட்டிக்கொண்டு அமர்ந்து வருகின்றனர். சில நடத்துநர்கள், முகக் கவசம் இல்லையென்றால் பேருந்தில் ஏற்றுவதில்லை. அதேசமயம் பலர் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. தற்போது ஜூலை31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே கரோனா தொற்று சங்கிலியை அறுத்தெரியும் இடங்களான பொது இடங்கள், பொது போக்குவரத்துகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும், பொதுமக்களிடம் உள்ளது. ஈரோட்டில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கு இடைநில்லா அரசுப் பேருந்தில் நேற்று பயணிக்க நேர்ந்தது. அளவு கடந்த கூட்டம். பலர் நிற்க இடமின்றி பயணித்தனர். தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்தாலும், இது போன்ற நெரிசல்களை தவிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே இதனை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. அரசும், போக்குவரத்துக் கழகமும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE