வாழ்வில் போராடினால்தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் :

By செய்திப்பிரிவு

திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில்முனைவு ஊக்குவிப்பு முகாம், திருப்பூர் மாநகரக் காவல்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. காவல்துறை துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) செ.அரவிந்த் வரவேற்றார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அரசு திட்டங்கள் குறித்து, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.அம்பிகா எடுத்துரைத்தார். ஆதார் அடையாள அட்டை பெறுதல் தொடர்பான விழிப்புணர்வை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், விவின் ஆகியோர் ஏற்படுத்தினர்.

மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா தலைமை வகித்து பேசும்போது, "திருநங்கைகளால் பிரச்னை ஏற்படும்போது, அவர்கள் மீது கோபம் வருவதில்லை. இந்த சமுதாயத்தின் மீது தான் கோபம் ஏற்படுகிறது. பெற்றோரால் நிராகரிக்கப்பட்டு, சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாமல் ஒதுக்கப்படுவதுதான் காரணம். யாராக பிறக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க முடியாது. ஆனால், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். யாராக இருந்தாலும் வாழ்வில் போராடினால்தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும்" என்றார்.

சமுதாயத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க தொழில் வாய்ப்புகள் குறித்தும், நல்ல முறையில் வாழ உள்ள வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தனியார் ஏற்றுமதி நிறுவனம் சார்பில், 30 திருநங்கைகளுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அனைத்து திருநங்கைகளுக்கும் புத்தகங்கள் வழங்கி காவல் ஆணையர் சிறப்பித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்