சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை குழு வளாகத்தில் உழவர் சந்தையை தொடங்க ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
தி.மலை மாவட்டத்தில் செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே மற்றும் தாமரை நகர் ஆகிய 8 இடங்களில் ‘உழவர் சந்தை’ செயல்படுகிறது.
இந்நிலையில், விளை பொருட்கள் வர்த்தகத்தின் மைய பகுதியாக விளங்கும் சேத்துப்பட்டு பகுதியிலும் ‘உழவர் சந்தை’ தொடங்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சேத்துப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை 5 முதல் 10 மெட்ரிக் டன் இருக்கும் என தோட்டக்கலைத் துறை கணக் கிட்டுள்ளது. இதனால், உழவர் சந்தையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
சேத்துப் பட்டு பகுதியில் உழவர் சந்தையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் உழவர் சந்தை தொடங்குவது குறித்து ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர், “உழவர் சந்தை அமைக்கப்படும்போது, விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் விளை பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தடையின்றி வந்து செல்லும் வகையில் வழித்தடம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின்போது, கோட்டாட்சியர் விஜயராஜ் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சேத்துப் பட்டு, செஞ்சி சாலையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.
அங்கு, 6 லட்சத்து 24 ஆயிரம் நெல் மூட்டைகள் குவிந்துள்ளன.தொடர்ந்து மழை பெய்து வருவதால், நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
அவருடன், மண்டல மேலாளர் கோபிநாத், தரக்கட்டுபாடு மேலாளர் அரங்கநாதன், கண்காணிப் பாளர்கள் பழனி, அமலநாதன் வட்டாட்சியர் கோவிந்தராஜன், செயல் அலுவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago