கோயில் நிலத்தில் காவல் நிலையம்அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ஆட்சியரிடம் பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ராக்கியாபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியிலுள்ள மந்தை பூமியில் கால்நடைகளை பராமரிப்பது, பாவு நூல் துவைப்பது, பக்தர்கள் பொங்கல் வைப்பது உட்பட பல்வேறு தேவைகளுக்கு, 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். மேற்கண்ட இடத்தில் திருமுருகன்பூண்டி காவல் நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்தனர். மாற்று இடம் தேர்வு செய்யக் கோரி பலமுறை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் சட்டபேரவைத் தலைவராக இருந்தவர், மாற்று இடம் தேர்வு செய்வதாகக் கூறியதால் காவல் நிலையம் அமைக்கும் பணி கைவிடப்பட்டது.
தற்போது, அதே இடத்தில் காவல் நிலையம் அமைப்பதற்கு பூமி பூஜை போட்டு காவல்துறையினர் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட இடத்தில் காவல் நிலையம் அமைக்க தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி விசாரணையில், திருப்பூர் ஆட்சியரிடம் 2 வாரங்களுக்குள் தங்களது கோரிக்கையை அனுப்பி வைக்குமாறும், அதனை ஆட்சியர் 8 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு செய்யுமாறும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை காவல் நிலையம் கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இதேபோல, காவல்நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரக் காவல் ஆணையர் வனிதாவிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago