கடலாடி அருகே பறவைகள் சரணாலயம் வேண்டாம் என கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கடலாடி அருகே மேலச் செல்வனூர்-கீழச்செல்வனூர் கண்மாய்களை ஒருங்கிணைத்து மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது. இது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வனத் துறையால் பராமரிக்கப்படுகிறது.
இச்சரணாலயத்தின் கண் மாயில் ஆண்டுதோறும் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கினால் ஆஸ்திரேலியா, ஐரோப்பா கண்டங்கள் மற்றும் உள்நாட்டுப் பறவை இனங்கள் வந்து 6 மாதங்கள் தங்கி இனப் பெருக்கம் செய்துவிட்டுச் செல்லும்.
இக்கண்மாயின் உபரி நீரை மட்டுமே பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவு தண்ணீர் குறைந்ததும் பறவைகளுக்காக தண்ணீரை வைத்துவிட்டு, விவசாயத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என வனத் துறையினர் விவசாயிகளை எச்சரிக்கின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, கால்நடைகளை கண்மாய்க்குள் மேய்ச்சலுக்கும் அனுமதிப்ப தில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். விவசாயப் பணிக்கு கண்மாயில் முழுமையாகத் தண்ணீர் இருந்தும் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால் தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மேலச் செல்வனூர் கிராமத் தலைவர் விவேகானந்தன் தலைமையில், கிராம மக்கள் நேற்று ஒன்று கூடி, தங்களது கிராமத்துக்குப் பறவைகள் சரணாலயத்தால் எந்தப் பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம். அதனால் தங்கள் கிராமத்துக்குப் பறவைகள் சரணாலயம் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
வனத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாகத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago