விருதுநகரில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள், அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதில் 35 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து நுண்ணீர் பாசன பதிவு சிறப்பு முகாமை ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதில் 12 விவசாயிகள் முன்பதிவு செய்தனர். தொடர்ந்து 2019-20-ம் நிதியாண்டில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மேலும் வேளாண் பொறியியில் துறை மூலம் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெறும் வகையில் துண்டுப்பிரசுரம், விருதுநகர் விற்பனைக் குழு மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் தொடர்பான துண்டுப்பிரசுரம், 2021-22-ம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
தொடர்ந்து கூட்டத்தில், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள கோடை உழுவு செய்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் ராம்குமார் எடுத்துரைத்தார்.
மேலும் வன விலங்குகளால் உயிர், பயிர்ச் சேதம் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள வன விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், முத்தரப்புக் கூட்டம் நடத்தவும், சாத்தூர் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையத்தை வத்திராயிருப்புக்கு மாற்றவும், தள்ளுபடி செய்யப்பட்ட நகைக் கடனுக்குரிய அடமான நகைகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்ரமணியன், வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திலீப்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகவேல், விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago