சிவகங்கையில் மின்வாரியம் அலட்சியத்தால் ரூ.250 செலுத்திய கூலித்தொழிலாளிக்கு ரூ.2,499 மின் கட்டணம் வந்துள்ளது. இதுபோன்ற குளறுபடிகளால் வாடிக்கையாளர்கள் மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பரவலால் மே மாதம் மின் கணக்கீடு எடுக்கவில்லை. இதனால் ஜூன் 15-ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்தது. மேலும் கடந்த 2019 மே மாதத்துக்குரிய மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த தொகை கூடுதலாக இருப்பதாக கருதினால், மின் மீட்டர் ரீடிங்கை தாங்களே கணக்கெடுத்தோ (அ) புகைப்படம் எடுத்தோ சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளருக்கு அனுப்ப வேண்டுமென மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஆனால் மின் மீட்டர் ரீடிங்கை அனுப்பியும் பல இடங்களில் உரிய கட்டணத்தை மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதனால் 2019-ம் ஆண்டு கட்டணத்தையே பலரும் கட்டினர். தற்போது கரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஜூலை மாதத்துக்குரிய மின் கணக்கீட்டை மின் ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று எடுத்தனர்.
ஆனால் கணக்கீட்டில் உள்ள குளறுபடியால் 2 மாதங்களுக்கு ரூ.250 மின் கட்டணம் செலுத்தி வந்த சிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திராவுக்கு இம்மாதம் ரூ.2,499 கட்டணம் வந்துள்ளது. இதனால் அவர் மின் கட்டணம் செலுத்தும் மையத்தில் வாக்குவாதம் செய்தார். இருந்தபோதிலும் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்தனர். இதேபோல் பலரும் மின் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ மின்வாரிய உயரதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,’ என்றனர். கரோனா சமயத்தில் பலரும் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வரும் நிலையில் பல மடங்கு மின்கட்டண உயர்வால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago