மதுரை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் என்னென்ன தடுப்பூசி போடப்படுகிறது என்கிற விவரங்களை மாவட்ட, மாநகராட்சி சுகாதாரத் துறைகள் அறிவிக்காததால் மக்கள் தினமும் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட சுகாதாரத் துறையும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் மாநகராட்சி சுகாதாரத் துறையும் தடுப்பூசிகளை விநியோகம் செய்து பொதுமக்களுக்கு செலுத்துகிறது. அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பாக இளங்கோ மேல்நிலைப் பள்ளி தடுப்பூசி மையத்துக்கு சுகாதாரத் துறை நேரடியாக தடுப்பூசிகளை வழங்குகிறது.
இதில், நகர்ப்புறங்களில் எந்தெந்த மையங்களில் என்னென்ன தடுப்பூசி செலுத்தப்படுகிறது, இருப்பு உள்ளிட்ட விவரங்களை மாநகராட்சி சுகாதாரத் துறை வெளியிடுவதில்லை. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், `நாங்கள் மொத்தமாக மாநகராட்சி சுகாதாரத் துறையிடம் வழங்கி விடுகிறோம். அத்துடன் தங்கள் வேலை முடிந்து விடுகிறது' எனக் கூறுகிறார்கள்.
பொதுமக்களுக்கு அதிகாரிகள் விவரங்களைக் கூறாததால், அவர்கள் தடுப்பூசி மையங்களுக்கு தினமும் வந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட முடியாமல் திண்டாடுகின்றனர்.
மேலும் அனைத்து மையங்களிலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்குவதாகக் கூறப்படுகிறது. அதனால், முதல் டோஸ் செலுத்த வரும் மக்கள், தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
குறிப்பிட்ட காலம் வரை முதல் டோஸ் செலுத்த வாய்ப்பில்லை, தடுப்பூசி வந்ததும் தெரிவிக்கிறோம் என்று சுகாதாரத் துறை தடுப்பூசி மையங்கள் வாரியாக தினமும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காததால் மக்கள் தினமும் தடுப்பூசி மையத்துக்கு வந்து ஏமாற்றம் அடைகின்றனர்.
குறிப்பாக கோவேக்சின் தடுப்பூசி மதுரையில் இருப்பே இல்லை. இந்த தடுப்பூசி எப்போது வரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள எப்போது வர வேண்டும் ஆகிய விவரங்களை அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை.
கே.புதூர், திடீர் நகர், அன்சாரி நகர், முனிச்சாலை ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த மையங்களில் கடந்த ஒரு வாரமாக கோவிஷீல்டு மட்டுமே போடப்படுகிறது. கோவேக்சின் செலுத்தப்படவில்லை.
இதேபோல் ரயில்வே மருத்துவமனையில் அவர்களது ஊழியர்கள் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் நடக்கும் சிறப்பு முகாம்களில் அதனை ஏற்பாடு செய்யும் சமூகத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தடுப்பூசிகளை பாராபட்சமில்லாமல் அனைத்து மையங்களுக்கும் அனுப்புகிறோம். தடுப்பூசி பற்றாக்குறை மதுரையில் மட்டுமின்றி நாடு முழுவதுமே உள்ளது’’ என்றனர்.
மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் வரவர தடுப்பூசிகளை மாநகராட்சிக்கு மொத்தமாக வழங்கி விடுகிறோம். அவர்கள் எந்தெந்த மையங்களுக்கு அனுப்புகிறார்கள், அதன் விவரம் எங்களிடம் இல்லை’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago