புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மானியத்துடன் சுயத்தொழில் தொடங்கலாம்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழிலுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை. இத்திட்டத்தின்கீழ் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்பயிற்சி தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45. முதல் தலைமுறை தொழில் முனைவோராக விண்ணப் பதாரர் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் வங்கி கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.in/needs என்கிற இணையதளத்தின் மூலம் உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்து இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தொடர்புடைய வங்கி கிளைகளுக்கு தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத் திலுள்ள ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் சலுகைகளுடன் கூடிய திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் தொடங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago