விலைவாசி உயர்வுக்கு ஏற்ப : புதிய கூலியை பெற்றுத்தர வேண்டும் : அமைச்சரிடம் விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கூலி உயர்வு பெற்று 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாலும், உதிரி பாகங்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு ஏற்பவும் புதிய கூலி பெற்றுத்தர வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கு மேல் விசைத்தறிகள் உள்ளன. அதில் 95 சதவீதம் விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கி வருகிறோம்.

கடந்த ஆண்டுகளில் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, தொழில் மேலும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. விலைவாசிக்கு ஏற்ப, கணிசமான கூலி உயர்வு கொடுத்தால்தான் தொழிலாளர்களை தக்க வைக்கமுடியும்.

விசைத்தறித் தொழில், தொழிலாளர்கள் நலன் கருதி, விலைவாசிக்கு ஏற்ப புதிய கூலியை பெற்றுத்தர வேண்டும். 2014-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தக் கூலியில் இருந்து அனைத்து ரகங்களுக்கும் 60 சதவீதம் கூலி உயர்வு, வாரந்தோறும் பாவு- நூல் தொகை வரவு செலவுகளுக்கு பில் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பாவுநூல்- ஜவுளி, காலி பீம்களுக்கு இதுவரையில் அனைத்து வாடகையும் விசைத்தறி உரிமையாளர்கள் கொடுத்து வருகிறார்கள். இனி 50 சதவீத வாடகையை தொழில் நலன் கருதி, ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்