பிற மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் நபர்கள், இ-பாஸ் பெற்றிருந்தாலும், கரோனா இல்லை என்ற சான்றும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற்றிருந்தாலும், கரோனா இல்லை என்ற சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும். நீலகிரி மாவட்ட மக்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பினாலும், அவர்களும் இந்த சான்றை பெற்றிருக்க வேண்டும்.
கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவி வருவதால், தமிழக எல்லைப் பகுதியான கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் மழை நீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசுக்களால் இந்த வைரஸ் பரவுவதால், இப்பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, மாலை நேரங்களில் புகை மருந்து அடிப்பது போன்ற பணிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago