மயிலாடும்பாறை அகழாய்வில் - 2500 ஆண்டுகள் பழமையான வாள் கண்டுபிடிப்பு : கலைஞர் வசனத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார் அமைச்சர்

By செய்திப்பிரிவு

மயிலாடும்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் இயக்குநர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த அகழாய்வில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்திட்டையில் 70 செ.மீ., நீளம் உள்ள இரும்பு வாள் ஒன்றை கண்டறிந்தனர்.

டிஎன்ஏ சோதனை

இதுதொடர்பாக அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறுகையில், பர்கூர் வட்டம் மயிலாடும்பாறையில், சானரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால (2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது) ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு முன்னோர்கள் எந்த மாதிரியான வாழ்வியல் முறைகளை மேற்கொண்டனர். உலக அளவில் உள்ள பல்வேறு இனக்குழுக்களில் இவர்கள் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட உள்ளது.

கடந்த 1980 மற்றும் 2003-ம் ஆண்டில் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில் இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த இடம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு கடந்த 3 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டதில் மனித எழும்புகள் எதுவும் நேரடியாக நமக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் ஆய்வில், இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 40 செ.மீ., வாளின் முனைப்பகுதி மட்டும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. வாளின் கைப்பிடி பகுதி இன்னும் எடுக்கவில்லை. ஈமச்சின்னத்தில் வைக்கப்பட்ட வாளானது நாளடைவில் மண்ணின் அழுத்தம் காரணமாக வாள் உடைந்து மேடு, பள்ளமுமாக மாறியுள்ளது. இந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டாக கருதப்படுகிறது. இந்த வாளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முடிவுகள் வந்தபிறகுதான் இந்த வாளின் சரியான காலத்தை கணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக, தமிழக பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் வாள் படத்தை பதிவிட்டு 'ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்' 1948-ம் ஆண்டு வெளிவந்த அபிமன்யு திரைப்படத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான வைர வரி என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்